அத்திக்கடவு - அவினாசி திட்டம் _ வருகின்ற 28 ம் தேதி அடிக்கல் நாட்டு விழாசேவூர் சுற்றுவட்டார பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

அத்திக்கடவு - அவினாசி திட்டம் _ வருகின்ற 28 ம் தேதி அடிக்கல் நாட்டு விழா
சேவூர் சுற்றுவட்டார பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

சேவூர், பிப்.23- அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கி, வருகின்ற 28 ம் தேதி அவினாசியில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இதற்கு சேவூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அத்திக்கடவு - அவினாசி திட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி வட்டமானது ஆண்டிற்கு சராசரி 600 மி.மீ முதல் 700 மி.மீ வரையிலான குறைந்த மழைப்பொழிவைப் பெற்று வரும் ஒரு வறண்ட பகுதி ஆகும்.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி, சேவூர், பெருமாநல்லூர், ஊத்துக்குளி, காங்கேயம், குன்னத்தூர், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, அன்னூர் வட்டார பகுதிகள், ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை, புளியம்பட்டி, நம்பியூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் திட்டம் இந்த அத்திக்கடவு - அவினாசி திட்டமாகும். இந்த  வட்டத்தின் ஒரு பகுதியில் பவானி ஆறு சென்றாலும், இதன் பிற பகுதிகளுக்கு இவ்வாற்றின் நீர் சென்று பயனடையும் வழி வகைகள் ஏதும் இதுவரை இல்லை. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு வருவதாலும், நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்து விட்ட காரணத்தாலும், பவானி ஆற்றின் உபரி நீரை இப்பகுதிகளுக்கு திருப்பி, குளங்கள் மற்றும் குட்டைகளுக்கு நீர் வழங்குவதன் மூலம், பாசன வசதி அளித்திட கொங்கு மண்டல மக்கள்  60 ஆண்டு காலமாக இத்திட்டத்தை கொண்டு வர வேண்டும் என கோரிக்கைகள், பல்வேறு போராட்டங்ககளை இப்பகுதி பொதுமக்களும் அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக் குழுவினரும் செய்து வந்தனர். இந்நிலையில் இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்காக ரூ 1000 கோடி நிதி ஒதுக்கிடு செய்தது. இதை தொடர்ந்து வருகின்ற 28 ம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணியளவில் அவினாசியில் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.
தற்போது வரும் 28ம் தேதி நடைபெற உள்ள அடிக்கல் நாட்டு விழாவிற்கு அவிநாசி பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

வரும் 28ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெறுவதை சேவூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆலத்தூர், பொங்கலூர், தண்டுக்காரன்பாளையம், கானூர் ,முறியாண்டம்பாளையம், போத்தம்பாளையம், பாப்பாங்குளம், வடுகபாளையம்,தத்தனூர் உள்பட 14 ஊராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், அத்திக்கடவு - அவினாசி திட்ட போராட்ட குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விரைந்து பணியை முடித்து அனைத்து குளம், குட்டைகளுக்கு நீரை நிரப்பி விவசாயத்திற்கு புத்துயிர் தர வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நன்றியையும் தெரிவிப்பதாக கூறினார்கள்.

Comments

Popular posts from this blog

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தத்தனூர் கிராமத்தில் அமைக்க உள்ள சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அவிநாசி சட்ட மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர் பரபரப்பு...