அ.இ.அ.தி.மு.கழகம் அமீத் ஷா தமிழக வருகைக்கு பின்னர் அகில இந்திய அடிமைகள் கழகம் என அன்போடு அழைக்கப்படுகிறது

அ.இ.அ.தி.மு.கழகம் அமீத் ஷா தமிழக வருகைக்கு பின்னர் அகில இந்திய அடிமைகள் கழகம் என அன்போடு அழைக்கப்படுகிறது 



 மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை  வரவேற்க தமிழ்நாடு மாநில முதல்வரே விமான நிலையம் சென்று காத்திருந்தார் என்ற செய்தி ஒரு சிறிய சம்பிரதாய மீறலாகத் தோன்றலாம். இதெல்லாம் ஒன்றும் சட்டத்தை மீறிய செயலில்லையே, ஆங்கிலத்தில் ப்ரோட்டோகால் என்று சொல்லக்கூடிய சம்பிரதாயம் அல்லது அலுவல் நடைமுறைதானே, அதை மீறியதால் என்ன பெரிய இழப்பு என்று கேட்கலாம்.
ஆனால் இந்த செயலை எடப்பாடி பழனிசாமி செய்திருக்கும் தருணம் முக்கியமானது. அது முன்னெப்போதும் இல்லாத அளவு மாநில உரிமைகள் மீதும், சமூக நீதி கோட்பாடுகள் மீதும், தொழிலாளிகள், விவசாயிகள் மீதும் பாரதீய ஜனதா கட்சி அரசு தாக்குதல்கள் தொடுத்துவரும் நேரம். அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் மாநில அரசியலின் தனித்துவத்தை, மாநில சுயாட்சிக்கான சாத்தியங்களை முற்றிலும் அழித்தொழிக்க பாரதீய ஜனதா கட்சி முனைந்துள்ள தருணம். இந்த நேரத்தில் முழுக்க, முழுக்க சுயநல அரசியலினை முன்னிட்டு முதல்வர் பதவியின் மாண்பினை எடப்பாடி பழனிசாமி சிதைத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அது மட்டுமல்லாமல் பாரதீய ஜனதா கட்சியின் அங்கமாகவே மாறி அ.இ.அ.தி.மு.க-வினர் அமித் ஷாவுக்குக் கட்சிக்கொடிகளை ஏந்தி வரவேற்பளித்த காட்சியினையும் பார்த்தோம். இதன் பிறகும் “அண்ணா”, “திராவிடம்” ஆகிய இரண்டு சொற்களையும் கட்சியின் பெயரில் வைத்திருப்பது சிறிதும் பொருத்தமற்ற செயல். ஆகையால்தான் இனி அந்தக் கட்சியை அகில இந்திய அடிமைகள் கழகம் என்று அழைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. சுருக்கமாக அ.இ.அ.க என்றே இனி குறிப்பிடுவோம். சரி அந்த “அகில இந்திய” என்பதற்காவது ஏதாவது பொருள் இருக்கிறதா என்று பார்ப்போம்.
அகில இந்திய அரசியலில் என்ன நடக்கிறது?
பாரதீய ஜனதா கட்சி 2019ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு இந்திய வரலாற்றில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை மறந்துவிட்டு, புறக்கணித்துவிட்டு தன் பெயரில் மட்டும் “அகில இந்திய” என்று கூறிக்கொள்வது நகைப்பிற்குரியது. பாரதீய ஜனதா அரசு தடாலடியாக காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியதுடன், அந்த மாநிலத்தையே மூன்றாகப் பிரித்து மூன்று பகுதிகளையும் யூனியன் பிரதேசங்களாக மாற்றியது. சிறப்பு அந்தஸ்தை நீக்குவது என்பது வேறு; ஆனால் ஒரு மாநிலத்தை மூன்றாகப் பிரித்து மாநில அந்தஸ்து என்பதையே நீக்கியதும், அனைத்து காஷ்மீர் மாநில அரசியல் தலைவர்களையும் சிறையில் அடைத்ததும் ஆகப்பெரிய எதேச்சதிகார நடவடிக்கை. கோமாளிகள் போல தங்கள் புரட்சித் தலைவரின் சினிமாப் பாடலை நாடாளுமன்றத்தில் “காஷ்மீர், பியூட்டிஃபுல் காஷ்மீர்” என்று பாடும் அ.இ.அ.கழகத்தினர், இந்த எதேச்சதிகார நடவடிக்கை குறித்து சிறிதும் பொருட்படுத்தவில்லை. 
காஷ்மீர் பிரச்சினையைத் தொடர்ந்து பாரதீய ஜனதா குடியுரிமை சட்ட சீர்திருத்தம் என்ற அடுத்த பிரச்சினையைத் தொடங்கியது. குடிமக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் அந்த சட்டத்தை பல உலக நாடுகளும், இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்த்தன. அஸ்ஸாமில் குடியேறிய இந்துக்களின் குடியுரிமையைப் பாதுகாப்பதற்காக, இஸ்லாமியர்களை மட்டும் குறிவைத்து அகற்றுவதற்கு உருவான இந்தச் சட்டத்தை எதிர்க்க தவறியது அடிமைகள் கழகம். சென்னையிலேயே முற்போக்கு சக்திகளும், சிறுபான்மையினரும் நடத்திய போராட்டங்களில் பங்கேற்க மறுத்தது.
விவசாயிகளை கார்ப்பரேட் நலன்களுக்கு பலிகொடுக்கும் சட்ட சீர்திருத்தங்களை ஆதரித்தது அடிமைகள் கழகம். இந்தச் சட்டங்களுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் வெடித்தெழுந்துள்ளது. இப்படி எத்தனையோ விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். நீட் தேர்வு, ஜி.எஸ்.டி வரிப்பகிர்வு, வெள்ள நிவாரணம் என எண்ணற்ற விஷயங்களில் மத்திய அரசு எவ்வளவு அடித்தாலும் வலிக்கவில்லை என்று சிரித்துக் கொண்டு நிற்கும் உன்னத அடிமைகளாக உள்ளது இந்த கழகம்.
எடப்பாடியும், சுயநலக் கூட்டமும்
ஜெயலலிதா மறைந்தவுடன் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக்கப்பட்டார். ஆனால் அவர் மெல்ல சசிகலாவின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி பாரதீய ஜனதாவின் பிடிக்குள் செல்வதைக் கண்டு சசிகலாவே முதல்வராக முன்வந்தார். ஆடிட்டர் குருமூர்த்தி போன்ற ஆர்.எஸ்.எஸ் -  சக்திகளின் தூண்டுதலில், ஓ,பி.எஸ் சசிகலாவை எதிர்த்து தர்ம யுத்தம் தொடங்கினார். ஆனால் அவரை நம்பி வெகு சில சட்டமன்ற உறுப்பினர்களே அவர் பின்னால் அணிதிரண்டனர். சசிகலாவும், தினகரனும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் கூவத்தூரில் ஒரு ரிசார்ட்டில் தங்க வைத்தனர். ஆளுநர் துணையுடன் அந்த உறுப்பினர்களை எப்படியாவது கலைக்க முயன்றும் நடக்கவில்லை. ஓ.பி.எஸ் கலகம் தோல்வியில் முடிந்தது. மத்திய அரசு அதை ரசிக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் உறங்கிக்கொண்டிருந்த பழைய சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியே வந்தது. சிறை செல்ல வேண்டிய சசிகலாவின் காலில் விழுந்து முதலமைச்சர் பதவி ஏற்றார் எடப்பாடி. வெற்றிகரமாக சட்டசபையிலும் பெரும்பான்மையை நிரூபித்தார்.
அதன்பிறகு நடந்ததுதான் வியப்பிற்குரியது. ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றால் அவர் முதல்வராகும் சூழ்நிலை வரலாம் என்று தெரிந்தது. அதை விரும்பாத மத்திய அரசு அந்தத் தேர்தலையே ஒத்திவைத்தது. பல ரெய்டுகளை நடத்தியது. அதில் இமாலய வெற்றி பெற்றார் தினகரன். அப்போது பார்த்தார் எடப்பாடி. தினகரனுக்குக் கட்டுப்பட்டு இருந்து மத்திய அரசை எதிர்த்துக்கொள்வதை விட, பாஜகவின் கட்டுப்பாட்டில் செயல்படுவதே தன் சுயநலத்திற்கு நல்லது என முடிவு செய்தார். அவர் பின்னாலிருந்த மொத்த கூவத்தூர் கூட்டமும் தங்கள் பதவிகளையும், அதன் ஆதாயங்களையும் தக்கவைத்துக்கொள்ள அவருடன் ஒத்துழைக்க முன்வந்தது. துரோகி ஓ.பி.எஸ் நண்பரானார். எடப்பாடி கூட்டம் மொத்தமும் சசிகலா - தினகரனுக்கு துரோகம் செய்யும் கூட்டமாக மாறியது. விரைவில் சசிகலா சிறையில் இருந்து வர உள்ளார், சசிகலா ரீ என்ட்ரி ஆட்டம் ஆரம்பமாக உள்ளது, காட்சிகள் மாறும் என்ன நடக்கும் என்று பொறுத்திருப்போம்.
அரசியல் பிரச்சினை என்னவென்றால் அன்றிலிருந்து பாரதீய ஜனதா கட்சிக்கு எழுதிக் கொடுத்த அடிமை சாசனம்தான். தங்கள் கட்சியின் எதிர்காலம், அதன் தனித்துவமான அடையாளம்தான் முக்கியம் என்று நினைத்திருந்தால், ஓ.பி.எஸ்ஸுடன் இணைந்திருக்க தேவையில்லை. என்ன வழக்குகளானாலும் சந்தித்திருக்கலாம். ஆட்சியை இழந்தாலும் கட்சியின் தனித்துவத்தை காப்பாற்றியிருக்கலாம். ஆனால் கட்சி, ஆட்சி எல்லாவற்றையும் தங்கள் சுயநலத்திற்காக பாரதீய ஜனதா கட்சியிடம் அடமானம் வைத்துவிட்டனர் அடிமைகள் கழகத்தினர்.
எதற்காக தேர்தல் கூட்டணி?
அமித் ஷாவை விமான நிலையம் சென்று வரவேற்றது மட்டுமில்லாமல், போட்டி போட்டுக்கொண்டு பாரதீய ஜனதாவுடன் கூட்டணி என்று அறிவித்தனர் ஓ.பி.எஸ்ஸும், ஈ.பி.எஸ்ஸும். பாரதீய ஜனதாவுடன் பல பிரச்சினைகளில் கொள்கை வேறுபாடு உண்டு என்று சொல்வார்கள் அ.இ.அ.க-வினரின். உதாரணமாக அ.இ.அ.க நீட் தேர்வை எதிர்ப்பதாக சொல்கிறது. பாரதீய ஜனதா கட்சியோ தீவிரமாக ஆதரிக்கிறது. பிறகு எதற்கு அந்த கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது கேள்வி.
இந்த கேள்விக்குப் பதிலாக அ.இ.அ.க பேச்சாளர்கள் கொள்கை வேறு, தேர்தல் கூட்டணி என்பது வேறு என்பார்கள். அதாவது கூட்டணி சேரும் கட்சிகளுக்குள் எல்லா கொள்கைகளிலும் உடன்பாடு இருக்க வேண்டிய தேவை கிடையாது என்பது பொருள்.  அரசியலில் ஒரு வலுவான சக்தியை எதிர்ப்பதற்காக, அதிகாரம் ஒரே புள்ளியில் குவிவதற்கு எதிரான கூட்டணியாக இருக்க வேண்டும், ஆனால் இவர்கள் கொள்கை வேறு , தேர்தல்  கூட்டணி வேறு  என சப்பை கட்டு தெரிவிகின்றனர்.
தமிழகத்தில் பாரதீய ஜனதாவிற்கு செல்வாக்கு இல்லை என்பது மட்டுமல்ல; மிகக் கணிசமான எதிர்ப்பும் இருக்கிறது என்பதுதான் உண்மை. எடப்பாடி விமான நிலையத்தில் அமித்ஷாவுக்காக காத்திருந்தபோது “Go Back Amit Shah” ட்விட்டரில் டிரெண்ட் ஆகியது. தொடர்ந்து சமஸ்கிருத திணிப்பு, இந்தி திணிப்பு, புதிய கல்விக்கொள்கை என்று செயல்படும் பாரதீய ஜனதா கட்சியை தமிழுணர்வாளர்கள் தீவிரமாக எதிர்க்கிறார்கள். சமூக நீதியில் அக்கறை உள்ளவர்கள் தீவிரமாக எதிர்க்கிறார்கள். தி.மு.க-வை விரும்பாதவர்கள், வெறுப்பவர்கள் பலர் கூட அதைவிட அதிகமாக பாரதீய ஜனதா கட்சியை எதிர்க்கிறார்கள்.
அரசியல் ரீதியாக தேர்தலில் தங்களுக்கு பலன் அளிக்காத, நோட்டாவைவிட குறைவான வாக்குகள் வாங்கும், கொள்கை ரீதியாக தங்களுடன் மாறுபடும், மாநில நலன்களை புறக்கணிக்கும் பாரதீய ஜனதா கட்சியுடன் இவ்வளவு தழைந்து போய், அடிபணிந்து, தாழ்ந்து பணிந்து கூட்டணி வைக்க வேண்டிய தேவை அடிமைகள் கழகத்திற்கு ஏன் ஏற்படுகிறது?
அப்பட்டமான சுயநலம், பிழைப்புவாதம் என்பதைத் தவிர இதில் வேறெந்த அரசியலும் இருக்க முடியாது என்பதுதான் வெளிப்படையான பதில். பாரதீய ஜனதா கட்சி மத்தியில் ஆள்கிறது, அதனிடம் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, உளவுத்துறை எல்லாம் இருக்கிறது, அதனால்தான் இவர்கள் இந்த  கூட்டணியை அமைத்து உள்ளனர் என   மக்களே வெளிப்படையாக பேசுகிறார்கள். அதைவிட முக்கியமாக பாரதீய ஜனதா தலைவர்கள் வெளிப்படையாகவே கேலி செய்து பேசுகிறார்கள். அமைச்சரவையில் இடம் பெறுவோம் என்றும். அதனாலென்ன? முழுக்க நினைந்த பிறகு முக்காடு எதற்கு என்று ஒரு சொலவடை உண்டு.

திருப்பூர் ஏ.கே.சாமி.👍

Comments

Popular posts from this blog

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தத்தனூர் கிராமத்தில் அமைக்க உள்ள சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அவிநாசி சட்ட மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர் பரபரப்பு...